Tuesday, January 26, 2010

கவனிக்கப்படாத கடவுளே!!!

அன்பெனும் புரிதலில்
பொதிந்து கிடக்கும் அரிதான
பொக்கிஷம் வாழ்க்கை,

செலுத்த செலுத்த
துளிர்க்கும்
மலர்ச்செடியாய்!

தன்னலமற்ற
அரவணைப்பின் ஆறுதலில்
அறிமுகம் செய்யப்படுகின்றன
பேதங்களற்ற பிறப்பின்
நற்பெருமை........

அமைதிக்கும், தனிமைக்கும்
அனுமதி தர மறுக்கும்
அயர்வற்ற வாழ்க்கையில்
இனிமையான இரண்டொரு வார்த்தைகள்
நெஞ்சினிக்கப்பேசிவிட்டால்
வறண்ட வாழ்க்கைதான்
சாரலென மாறாதோ.......!

துவண்ட வாழ்க்கைதான்
தூறலென தூறாதோ......!

பகட்டான வாழ்க்கையில்
உண்மையான அன்பை
விலைகொடுத்தும் பெறக்கிடைக்காத
வசதி படைத்த செல்வந்தரே
வறுமைக்கோட்டுக்கு கீழே
வாழ்க்கையை
வாழ்ந்து முடிக்கிறார்.......

காசு,பணம் கணக்கின்றி சேர்த்து
கோயில் குளம் சுற்றித்திறிவோர்க்கு
அடைய நினைக்கும் அமைதி
இயலாதோர்க்கு ஈகை செய்வதிலும்
அடுத்தவர் மீது அன்பு செலுத்துவதிலும்
வெட்ட வெளியினைப்போல்
கொட்டிக்கிடக்கிறதென்று
தெரிவதேனில்லை........!

கானல் நீராய்
கையில் சிக்காத
காலச்சக்கரத்தில்
களைப்படைந்து போகும் போது
உற்சாகத்தையும்.......

கலையிழந்து போகும்போது
உத்வேகத்தையும்

தரும்

அன்பெனும் உன்னத உணர்வு
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும்
கடந்து சென்றும்
கவனிக்கப்படாத கடவுளே!!!

அரிதான மனிதப்பிறவியில்
எதையோ தொலைத்துவிட்ட
தேடல்களில்
பிறவிப்பயனீட்ட மறந்தவர்க்கு
ஞாபகமிருக்கட்டும்
பிறிதொரு ஜென்மம் நிச்சயமில்லை.......

Wednesday, August 12, 2009

அந்தக்கார்கால முற்றத்தில்
பட்டுத்தெறிக்கும்
மழைத்துளிகள் அள்ளி
உன் மேனியில் தெளிக்கிறேன்......

அவசரமாய் இடைமறித்து
நீ என் காதைத்திருக,
அப்பாவியாய் நானும் வலிக்கிறதென
முகம் சுருக்கி நடிக்க,
சட்டென்று சிரிப்பு வந்தவளாய்....
வெட்கப்பட்டு அந்தப்பக்கம்
திரும்பிக்கொள்ள
உன் சிவந்த முகத்தை
கண்ணாடியில் பார்த்து ரசிக்கிறேன்......

****************************************************************
அப்படி என்னதான்
ரகசியம் சொல்லப்போகிறேனென்று
வெட்கம் கலந்த ஆவலோடு
காதைகொடுக்கிறாய்.....
ஏதோ நான் சொல்லித்தொலைக்கச்
சீ என்று சொல்லி அங்கிருந்து நீ ஓட
உன்னை விரட்டிப்பிடித்துசேர்த்து
அணைத்தபோது நெஞ்சில்
சாய்ந்துகொண்டு
என்னை விலகிப்போகச்சொல்கிறாய்.....
அதன் அர்த்தம் புரிந்தவனாய்
இன்னும் இறுக்கிக்கொள்கிறேன்.... *******************************************************************
சமையலறையில்உதவி செய்வதாகச்
சொல்லிஉன்னை உரசி விளையாடும்
என்னைச்
சற்று தள்ளி நில்லடா என்று
சொல்லி கரண்டியாலே
எச்சரிக்கை செய்கிறாய்.....
ஒற்றை முத்தம் லஞ்சமாய்
தந்தால் மட்டும் நடக்குமென்று
சிறுபிள்ளையாய் அடம்பிடிக்க
புன்னகையோடு என்னைக்கட்டிக்கொள்கிறாய்....
அங்கே கடுகும் , கரிவேர்பிள்ளையும் சட்டியில்
சண்டையிட்டுக்கொண்டிருக்க
இங்கே நம் இதழ்களும்..... *********************************************************************
வலிக்காமல் தலையில் கொட்டு வைத்து
கணக்குப்பாடம் கூட தெரியாதா என்கிறாய்....
அடி போடி ,
உன்னையே கணக்குப்பண்ணிய எனக்கு
இதெல்லாம் எம்மாத்திரம்.....
ஒன்றும் ஒன்றும் நான்கென்று வாதிடும் எனக்கு
இன்னும் பத்து மாசம் அவகாசம் கொடு
உன்னை வைத்தே சரியென நிரூபிப்பேன் என்கிறேன்..... ******************************************************************
நீ தோட்டத்தில் பூப்பறிக்க
பின்னாலிருந்து சட்டென்று தோன்றி
அப்படியே இறுக்கி அணைக்க
அந்தப்பூக்கள் உயரச்சிதறி
நம்மில் வீழ்கிறது....
திருட்டுப்பயலே என்று சிணுங்கிக்கொண்டே
எங்கே எடுத்துவிடுவேனோ என்று
அவசரமாய்...என் கைகளை இறுகப்பற்றி
இணைத்துக்கொள்கிறாய்....
பூக்கள் கேலி செய்வதையும்
பொருட்படுத்தாமல்
என் நெஞ்சில் உன் விரல்கொண்டு
கோலம் இட்டுக்கொண்டிருக்கிறாய்.... *************************************************************************
நிகழ்ச்சியொன்றில்
நண்பர்கள் ஒன்றுகூடி
ஏதேதோ சுவாரஸ்யமாய்
பேசிக்கொண்டிருக்க யாருக்கும் தெரியாமல்
நான் உன் இடுப்பைக்கிள்ள
துள்ளிக்குதித்த உன்னை
என்னாச்சென்று எல்லோரும் கேட்க
ஒன்றுமில்லை எறும்பு என்று
சமாளித்து வழியும் உன் முகத்தைபார்த்து
குறும்பாய் சிரிக்க இருடா ,
உன்னை அப்புறமா வச்சுக்கிறேன் என்கிறாய்...
.அதெல்லாம் முடியாது
நான்தான் உன்ன காலம்பூரா வச்சுக்குவேன்..... ***************************************************************
உன்னை மடியில் கிடத்தி
தலை மயிர் வருடிக்கொண்டே
தேவதை கதைகள் சொல்ல
ரசித்துகிடந்தவுன் கண்ணத்தை
அவசரமாய் கடித்துவிட்டு எழுந்து
ஒடுகையில் குச்சியெடுத்து
என்னை விரட்டிபபிடித்து
இன்னொரு கண்ணத்தை காட்டுகிறாய்......
அதையும் கடித்து வைக்கவாம்....! ****************************************************************